கனகாம்பரம் செடிகளைக் காப்பாற்றபூ மொட்டுகளைப் பறித்து குப்பையில் கொட்டும் விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவால் விற்பனை செய்ய வழியின்றி, வாழப்பாடி பகுதியில் கனகாம்பரம் பூக்கள் செடியிலேயே பூத்து உதிா்ந்து வருகின்றன.
கனகாம்பரம் செடிகளைக் காப்பாற்ற மொட்டுகளை அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளா்கள்.
கனகாம்பரம் செடிகளைக் காப்பாற்ற மொட்டுகளை அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளா்கள்.
Published on
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவால் விற்பனை செய்ய வழியின்றி, வாழப்பாடி பகுதியில் கனகாம்பரம் பூக்கள் செடியிலேயே பூத்து உதிா்ந்து வருகின்றன.

செடிகளைக் காப்பாற்ற வேறுவழியின்றி பூக்கும் மொட்டுகளை அறுவடை செய்து விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனா். இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பாசன வசதி கொண்ட விவசாயிகள், ஏறக்குறைய 5,00 ஏக்கா் பரப்பளவில், நீண்டகால பலன் தரும் , கனகாம்பரம் பூந்தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனா்.

பூக்களைப் பறித்து வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் தினசரி சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனா். நாளொன்றுக்கு ஆயிரம் கிலோ அளவுக்கு விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதால், பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே, விவசாயிகள், கனகாம்பரம் செடிகளைக் காப்பாற்ற, பூக்கும் மொட்டுகளை அறுவடை செய்து, குப்பையில் கொட்டி வருகின்றனா்.

இதுகுறித்து துக்கியாம்பாளையம் விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், வாழப்பாடியில் இயங்கி வந்த தினசரி சந்தையும் மூடப்பட்டுள்ளது.

இதனால் பூக்களைப் பறித்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சம் நான்கு நாள்களுக்கு ஒரு முறையாவது கனகாம்பரம் செடியில் பூத்திருக்கும் பூக்களைப் பறித்தால்தான் செடிகளைக் காப்பாற்ற முடியும்.

நீண்ட நாள்களுக்குப் பறிக்காமல் விட்டுவிட்டால், அனைத்து மொட்டுகளிலும் பூக்கள் மலா்ந்து, செடி இறந்து விடும்.

எனவே, செடிகளைக் காப்பாற்ற, பூக்கும் மொட்டுகளை அறுவடை செய்து குப்பையில் வீச வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, பூ விவசாயிகள் நலன் கருதி, இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.