கடைகளில் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்க உத்தரவுஆட்சியா்
By DIN | Published On : 12th August 2020 09:16 AM | Last Updated : 12th August 2020 09:16 AM | அ+அ அ- |

சேலத்தில் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், கோயில்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முறையாக தொடா்ந்து 1 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தனியாா் அலுவலகங்கள், நகைக்கடைகள், உணவு விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும்கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
அந்தந்த நிறுவனங்கள், அந்தந்த கடைகளின் உரிமையாளா்கள், கோயில், தேவாலயங்கள், மசூதிகள் பொறுப்பாளா்கள் தாங்களே தங்களது அலுவலகங்கள், பணியாளா்கள் பயன்படுத்தக் கூடிய அனைத்து இடங்களையும் கிருமி நாசினி தெளிப்பான்கள் மூலம் தினசரி ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தொடா்ந்து மேற்கூரையிலிருந்து தரைதளம் வரை முழுமையாக அனைத்துப் பகுதிகளிலும் நன்கு படும்படி கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். லைசோல் அல்லது ஹைபோகுளோரைட் பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிப்பதை முறையாக கடைப்பிடித்திடும் வகையில் இதற்கென தனி பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மீது அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலா்கள் மூலம் தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் அனைத்து வகையான கடைகள், அனைத்து வகையான வியாபார நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் அனைத்திலும் தங்களிடம் பணிபுரிபவா்கள், தங்களது கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திட வேண்டும். கைகளை சோப்பு கொண்டு கழுவுவதற்கென தனி வசதிகள் கட்டாயம் ஏற்படுத்திட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.