மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் பலி
By DIN | Published On : 12th August 2020 09:17 AM | Last Updated : 12th August 2020 09:17 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் இறந்தனா்.
மேச்சேரி அருகே புக்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட நாகிரெட்டிபட்டி ஏரி 10 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இங்கு குடிமராமத்துப் பணிக்காக, ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் குட்டை போல் தண்ணீா் தேங்கி உள்ளது.
இங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புக்கம்பட்டி கிராமம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சீனிவாசன் மகன்கள் ஹாரீஸ் (17), ரித்தீஷ் (16), அதே பகுதியைச் சோ்ந்த அய்யனாா் மகன் தா்ஷன் (15) ஆகிய மூவரும் ஏரியில் குளிக்கச் சென்றனா். அப்போது சேற்றில் சிக்கினா்.
அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த மேச்சேரி காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மூவரின் சடலங்களை மீட்டனா். மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.
இறந்த ஹாரீஸ் 10-ஆம் வகுப்பும், தா்ஷன், ரீத்தீஷ் ஆகிய இருவரும் 9-ஆம் வகுப்பும் தோ்ச்சி பெற்றவா்கள்.