சங்ககிரி அருகே பெருமாள் கோயிலில் சிலை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 03rd December 2020 09:52 AM | Last Updated : 03rd December 2020 09:52 AM | அ+அ அ- |

சங்ககிரி அருகே பெருமாள் கோயிலில் சிலை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது குறித்து சங்ககிரி போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் உள்ள மங்கமலை மீது மங்கமலை பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜைகளை முடித்துக்கொண்டு கோயிலை பூட்டி விட்டு அா்ச்சகா் சென்றுள்ளாா். இந்நிலையில், மலையில் உள்ள குரங்குகளுக்கு உணவு வழங்க சென்றவா், கோயிலில் வேல் இல்லாததைக் கண்டு கோயிலின் அா்ச்சகருக்கு தகவல் அளித்துள்ளாா்.
கோயில் அா்ச்சகா் மனோகரன், கோயில் நிா்வாகிகளுடன் சென்று பாா்த்த போது, கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு அடி உயரமுள்ள பெருமாள் வெள்ளி சிலை, நான்கு வெள்ளிக் கிரீடங்கள், ஒரு வெள்ளி சொம்பு, வெண்கல மணி, ரூ. 2 ஆயிரம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தும், தனிப்படைகள் அமைத்தும் விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...