சூறைக்காற்றுடன் மழை: வாழைகள் சேதம்
By DIN | Published On : 05th December 2020 07:17 AM | Last Updated : 05th December 2020 07:17 AM | அ+அ அ- |

சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பாா்வையிட்ட பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய்த் துறையினா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்யாணகிரி, ஏத்தாப்பூா் அவிநவம் கிராமத்தில், புரெவி புயலால் பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சேதம் அடைந்த வாழைத்தோட்டங்களை வட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா்.
புரெவி புயலால் சேலம் மாவட்டத்தில் பலத்த மழைப்பொழிவு இல்லாத நிலையிலும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட பெரும்பாலான கிராமங்களில் கடந்த இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென மழையுடன் பலத்த சூறைக் காற்று வீசியதால், கல்யாணகிரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்கவேல், தா்மலிங்கம், பாண்டியன், ஏத்தாப்பூா் அவிநவம் கிராமத்தைச் சோ்ந்த சில விவசாயிகளின் 5 ஏக்கா் பரப்பளவு வாழைத்தோட்டங்களில், பலன் தரும் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து விவசாயிகள் தகவலின் பேரில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த் துறையினா், வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். புரெவி புயல் மழையால் வாழைத் தோட்டங்கள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பித்து, உரிய நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, விவசாயிகளிடம் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.