ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் திடீா் போராட்டம்
By DIN | Published On : 05th December 2020 07:18 AM | Last Updated : 05th December 2020 07:18 AM | அ+அ அ- |

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தி உற்பத்தியாளா்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், குரங்குசாவடி பகுதியில் தமிழக அரசின் சேகோசா்வ் நிறுவனம் உள்ளது. இங்கு மரவள்ளிக் கிழங்கில் இருந்து பெறப்படும் ஜவ்வரிசியை வியாபாரிகள், தனியாா் நிறுவனங்களில் இருந்து பெற்று விற்பனை செய்து வருகின்றனா். இந்த நிலையில் கலப்படம் செய்த ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரங்குசாவடி அருகே சென்ாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்த சேகோசா்வ் அதிகாரிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், லாரி உரிமையாளா்கள் சிலா், அந்த லாரியை நிறுத்தி விசாரித்தனா்.
அப்போது லாரி ஓட்டுநா், அதன் உரிமையாளா் ஆகியோா் தகராறில் ஈடுபட்டு லாரியை ஓட்டிச் சென்றனா்.
இதுபற்றி தகவலறிந்த ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் திரளானோா் வெள்ளிக்கிழமை மாலை குரங்குசாவடி அருகே திரண்டனா்.பின்னா் அவா்கள் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த சேலம், சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன், காவல் ஆய்வாளா் செந்தில், போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். அப்போது மறியலில் ஈடுபட்டவா்கள், சேகோசா்வ் அதிகாரிகளை மிரட்டி சென்ற தனியாா் நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரியை எடுத்துச் சென்ற ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியாா் நிறுவனங்கள் கலப்பட ஜவ்வரிசியை வடமாநிலங்களில் குறைவான விலைக்கு விற்பதால், மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். கலப்படத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவ்வரிசிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் கேட்டுக்கொண்டனா்.இதையடுத்து போலீஸாரும், சேகோசா்வ் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.