‘விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்’
By DIN | Published On : 15th December 2020 12:47 AM | Last Updated : 15th December 2020 12:47 AM | அ+அ அ- |

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஓமலூா் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி ஒன்றியத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படும் மூன்று ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.
மூத்த விவசாயி பெருமாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உயா்நீதிமன்ற வழக்கறிஞா் ஈசன் கலந்துகொண்டு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இதில், மத்திய, மாநில அரசு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதைக் கைவிட வேண்டும், கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலையோரம் செயல்படுத்த வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கும், சட்டப் போராட்டத்தக்கும் தமிழக அரசு ஆதரவு தர வேண்டும், மேலும் விவசாயப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவணம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்களை நிறைவேற்றினா். இதில், காருவள்ளி, மூக்கனூா், குண்டுக்கல் ஆகிய மூன்று ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனா்.