விவசாயிகளுக்கு நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டப் பயிற்சி
By DIN | Published On : 30th December 2020 07:13 AM | Last Updated : 30th December 2020 07:13 AM | அ+அ அ- |

நங்கவள்ளி வட்டாரத்தில் உள்ள கோனூா் ஊராட்சி விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான மானாவரி மேம்பாட்டுத் திட்டம் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை செயல்பாடுகள் குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கோனூா் கிழக்கு கிராம கிணற்றுப் பாசனம், மானாவரி விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, நங்கவள்ளி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராஜகோபால் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா்கள் கஜேந்திரன், உதவி வேளாண் அலுவலா் சிலம்பரசன் ஆகியோா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநா் ராஜகோபால் பேசும்போது, விதை நோ்த்தியைக் கடைப்பிடித்தால் அதிக விளைச்சலை பெறலாம். ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். மண்புழு உரம், தழை, இலைகளையும், குப்பை எருவையும் பயன்படுத்த வேண்டும். பயிா்களில் தீங்கு செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டையை இரண்டு நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம். இதனை தெளிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகளையும் காப்பாற்றலாம். தென்னை மரத்துக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தென்னை டானிக்கை அதன் வேரில் கட்டினால் நல்ல மகசூல் தரும். தென்னம்பிஞ்சுகள் கொட்டாது என்றாா். மேலும் மகசூல் இழப்புக்கு காப்பீடு பெறும் முறைகள் குறித்தும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தாா்.
இம்முகாமில், அட்மா திட்ட அலுவலா்கள் ஷெல்லி ராஜ்குமாா், தீபன்முத்துசாமி, விவசாய சங்கத் தலைவா் குமாா், துணைத் தலைவா் ராஜி, செயலாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...