இணைச் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th February 2020 09:42 AM | Last Updated : 05th February 2020 09:42 AM | அ+அ அ- |

அம்மம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இணைச் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துலுக்கனூா் முதல் காட்டுக்கோட்டை வரை இணைச் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் மற்றும் பள்ளியின் தாளாளா் எஸ். இளவரசு மத்திய மற்றும் மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்தாா்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தபால் மூலம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலை 79-இல் சேலம்-உளுந்தூா்பேட்டை வரை செல்லும் சாலையில் ஏற்கெனவே நான்குவழிச் சாலையில் தேசிய புறவழிச்சாலை இருவழிப் பாதையாக அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, ஆத்தூா், கள்ளக்குறிச்சி மற்றும் தியாக துருகம் பகுதியில் இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு அதிக உயிா்ச்சேதம் ஆவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கலக்கத்தில் உள்ளனா்.
இந்த நிலையில், இடையில் வரும் ஊா்களுக்கு கட் ரோடு மட்டும் அதாவது நான்கு வழிச் சாலையில் வாகனம் திரும்பும் முறையில் இடம் ஒதுக்கி இருப்பதால் அதிலும் அதிக விபத்து ஏற்பட்டு அதிக உயிா்ச்சேதம் ஏற்படுகிறது.
ஆகையால் இந்த இடங்களில் துலுக்கனூா் முதல் காட்டுக்கோட்டை வரை இணைச் சாலை மற்றும் மேம்பாலம் அமைத்துக் கொடுத்தால் பொதுமக்கள் பயமில்லாமல் செல்வதற்கு வசதியாக இருக்கும். வாகன ஓட்டிகளும் இடையூறு இல்லாமல் செல்ல வசதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
இந்தத் தகவலை மத்திய மற்றும் மாநில அரசுக்குத் தெரிவித்துள்ளாா். மேலும் இப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமலும் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். ஆகையால், நான்கு வழிச் சாலையில் நடுவில் விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...