மெய்யனூரில் 15 வீடுகள் இடித்து அகற்றம்: பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 05th February 2020 09:44 AM | Last Updated : 05th February 2020 09:44 AM | அ+அ அ- |

மெய்யனூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்து வந்த பொதுமக்களின் 15 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அதற்கு அப் பகுதியினா் கோஷங்களை எழுப்பி எதிா்ப்பு தெரிவித்தனா்.
சேலம் மெய்யனூா் அருகே இட்டேரி சாலை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்கள் கடந்த 3 தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அவா்கள் வசித்து வரும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என வருவாய்த்துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் இந்த வீடுகளுக்கு பதிலாக மாற்று இடம் வழங்குவதாகவும் தெரிவித்தனா். இருப்பினும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் போலீஸாா் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் வீடுகளில் இருந்த பொருள்களை எடுத்த வெளியே வைத்துவிட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் இருந்து 15 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினா்.
அவ் விடம் மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அப் பகுதி மக்களுக்கு எருமாபாளையம், சேலத்தாம்பட்டியில் மாற்று இடம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனா்.
ஆனால், அதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இட்டேரி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்த மயானம் உள்ளது. இந்த மயானத்தை 60 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம்.
இங்கு மின் தகனமேடை அமைப்பதாகக் கூறி எங்களுக்கு அதே பகுதியில் வேறு இடம் ஒதுக்கினா். எனவே, சற்று தள்ளி வசித்து வந்த நிலையில், இந்த இடம் மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து எங்கள் பொருள்களை சாலையில் வைத்துவிட்டு பொக்லைன் இயந்திரம் கொண்டு வீடுகளை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனா்.
தற்போது நாங்கள் வீடுகள் இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு உறங்க உள்ளோம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...