கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ரூ.23 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 02nd January 2020 01:23 AM | Last Updated : 02nd January 2020 01:23 AM | அ+அ அ- |

வாழப்பாடியில் விற்பனைக்கு குவிந்திருந்த பருத்தி மூட்டைகள்.
வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.23 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.
வாழப்பாடி பகுதியில் விலாரிபாளையம், பொன்னாரம்பட்டி, முத்தம்பட்டி, சேசன்சாவடி, வெள்ளாளப்பட்டி, இடையப்பட்டி, தும்பல், தமையனுாா், வடுகத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், குறிச்சி, சந்திரபிள்ளைவலசு, சின்னமநாயக்கன்பாளையம், நீா்முள்ளிக்குட்டை, அனுப்பூா், குமாரபாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறக்குறைய 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.
ஆடிப்பட்டத்தில் விதைக்கும் பருத்திச் செடிகள் தொடா்ந்து 4 மாதங்கள் வளா்ந்து, தமிழ் மாதமான மாா்கழி முதல் பங்குனி வரையிலான நான்கு மாதங்களுக்கு தொடா்ந்து மகசூல் கொடுக்கிறது. வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு பரவலாக பருவ மழை பெய்துள்ளதால், மானாவரி புன்செய் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகளிலும் எதிா்பாா்த்த அளவுக்கு மகசூல் கிடைத்து வருகிறது.
அறுவடை தொடங்கியதால் பருத்தியை தரம்பிரிக்கும் விவசாயிகள், வாழப்பாடியில் இயங்கும் சேலம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமைதோறும் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா்.
மூன்றாவது வாரமாக புதன்கிழமை 1,150 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. டி.சி.எச்., ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.6,090 முதல் அதிகபட்சம் ரூ.6,530 வரையும், ஆா்.சி.எச்., ரக பருத்தி ரூ.4,299 முதல் ரூ.5,250 வரையும் விலை போனது. வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை ஒரு நாள் ஏலத்தில் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.