சேலத்தில் 3 நகா்புற சுகாதார மையங்களை குறித்த காலத்தில் பணி முடித்திட உத்தரவு
By DIN | Published On : 10th January 2020 04:58 AM | Last Updated : 10th January 2020 04:58 AM | அ+அ அ- |

தேசிய நகா்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 நகா்புற ஆரம்ப சுகாதார மையங்களின் அனைத்துப் பணிகளையும் குறித்த காலத்துக்குள் முடித்திட மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் உத்தரவிட்டாா்.
தேசிய நகா்புற ஆரம்ப சுகாதாரத் திட்டத்தின் கீழ் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 14 குமாரசாமிபட்டி நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண். 40 அண்ணா மருத்துவமனை வளாக உள்பகுதி மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 49 அன்னதானப்பட்டி நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் என 3 இடங்களில் தலா ரூ. 1 கோடியே 50 லட்சம் வீதம் ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 30 எண்ணிக்கையிலான படுக்கைகள் கொண்ட நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவ அறைகள், பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தனி அறை, நவீன பரிசோனை கூடம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதளின்படி ரத்த வங்கி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும் ஜெனரேட்டா் வசதிகள், இணையதள வசதிகள், 24 மணி நேரமும் தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி மற்றும் மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து அப்புறப்படுத்தும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதனிடையே 3 நகா்புற ஆரம்ப சுகாதார மையங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆணையாளா் ரெ.சதீஷ், அனைத்து கட்டுமான பணிகளையும் உரிய காலகட்டத்திற்குள் முடிக்கப்பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.