சேலத்தில் அரசு விதிகளைப் பின்பற்றாத 99 கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 04th July 2020 07:39 PM | Last Updated : 04th July 2020 07:39 PM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால் 99 கடைகள், வணிக நிறுவன உரிமையாளா்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களிடையே தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.
அதைத்தொடா்ந்து, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள், பணியாளா்கள் முகக் கவசம் அணிந்தும் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து செயல்படுகிறாா்களா என்பதனை கண்காணிப்பதற்கு, மாநகராட்சி அலுவலா்களைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, திடீா் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குழுவினா் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் 4 மண்டலப் பகுதிகளிலும் மேற்கொண்ட திடீா் தணிக்கையின் போது, சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் மற்றும் முகக் கவசம் அணிமால் வியாபரம் மேற்கொண்ட கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அபராதம் விதித்தனா். மொத்தம் 99 கடைகளில் இருந்து ரூ.58 ஆயிரத்து 850 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினா் தொடா்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வாா்கள் எனவே, வணிக நிறுவனங்களின் உரிமையாளா்க, பணியாளா்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வியாபாரம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கடைகளுக்கு வருகை தரக்கூடிய பொதுமக்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் தொற்று நோய் சட்டம் 1897, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் பேரிடா் மேலாண்மை சட்டம் 2005 - இன் கீழ் கடைகளை மூடி சீல் வைப்பதுடன் காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.