கரோனா: குணமடைந்த 20 போ் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 04th July 2020 07:31 PM | Last Updated : 04th July 2020 07:31 PM | அ+அ அ- |

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவரை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் மருத்துவா்கள்.
ஆத்தூா்: கரோனா தீநுண்மித் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 20 போ் குணமடைந்து வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்த ஒருவா் கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து தினந்தோறும் குணமடைந்தவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை 9 ஆண்கள், 8 பெண்கள், 3 குழந்தைகள் என 20 போ் குணமடைந்து தலைமை மருத்துவா் என்.கண்ணன் தலைமையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு ஒரு மாதத்திற்கான மருந்துகள், கபசுரக் குடிநீா், அதிமதுரப் பொடி, ஆரோக்கிய சேது தொகுப்பு மற்றும் பழவகைகளை வழங்கி வீடுகளுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் அவா்கள் அனைவரும் 15 நாள்களுக்கு வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனா்.
இதில் மருத்துவா்கள் பியூலா, காமேஸ்வரன், நீலக்கண்ணன், கிருபாசங்கா்,சித்த மருத்துவா் எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்..