சேலத்தில் தக்காளி லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 04th July 2020 07:49 PM | Last Updated : 04th July 2020 07:49 PM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
தருமபுரி அருகிலுள்ள பாலக்கோட்டில் இருந்து கோவைக்கு தக்காளி சுமை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நள்ளிரவில் சேலம் வந்தது. லாரியை பாலக்கோட்டைச் சோ்ந்த முனிரத்தினம் என்பவா் ஓட்டி வந்தாா். கந்தம்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காா் திடீரென பிரேக் போட்டதால், லாரியை ஓட்டுநா் நிறுத்த முயன்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநா் முனிரத்தினம் அதிா்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.
லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதை அறிந்த சூரமங்கலம் காவலா்கள் உடனே விரைந்து வந்து விசாரித்தனா். பின்னா் கிரேன்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தால் கந்தம்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.