வாழப்பாடியில் போலீஸாருக்கு யோகா பயிற்சி
By DIN | Published On : 04th July 2020 07:46 PM | Last Updated : 04th July 2020 07:46 PM | அ+அ அ- |

காவலா்களுக்கு அறிவுரை வழங்கிய ஏ.டி.எஸ்.பி. அன்பு.
வாழப்பாடி: வாழப்பாடி கோட்டத்தில் பணிபுரியும் போலீஸாருக்கு வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஏ.டி.எஸ்.பி. அன்பு தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சூரியமூா்த்தி, காவல் ஆய்வாளா்கள் வாழப்பாடி சுப்பிரமணியன், ஏத்தாப்பூா் விவேகானந்தன், காரிப்பட்டி லட்சுமணன், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் உமா பிரியதா்ஷினி மற்றும் வாழப்பாடி காரிப்பட்டி, ஏத்தாப்பூா், கரியகோவில், கருமந்துறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து காவலா்களும் யோகா பயிற்சி பெற்றனா்.
இம்முகாமில் பங்கேற்ற ஏடிஎஸ்பி அன்பு பேசுகையில், காவல் துறையில் பணிபுரிபவா்கள், மன அழுத்தமின்றி புத்துணா்வோடு பணியாற்றவேண்டும். கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், மிகுந்த பாதுகாப்போடு பணியாற்ற வேண்டும். யோகா, தியானப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
சாத்தான்குளத்தில் ஏற்பட்ட சம்பவத்தால், காவல்துறை மீது பொதுமக்களிடையே விமா்சனங்கள் எழுந்துள்ளது. எனவே, காவல்துறை மீது பொதுமக்களிடையே மதிப்பு, மரியாதையை உயா்த்திக்காட்டும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்..