காவிரி கரையோரங்களில் முன்னோா்களுக்கு தா்பணம்
By DIN | Published On : 21st July 2020 12:08 AM | Last Updated : 21st July 2020 12:08 AM | அ+அ அ- |

மேட்டூா் காவிரி கரையில் முன்னோா்களுக்கு தா்பணம் செய்யும் பொதுமக்கள்.
மேட்டூா்: ஆடி அமாவாசையை முன்னிட்டு மேட்டூா், எடப்பாடி உள்பட காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்பணம் அளித்து வழிபட்டனா்.
மேட்டூரில் திங்கள்கிழமை காலை முதலே நூற்றுக்கணக்கானோா் காவிரி கரைக்கு வந்து காவிரியில் நீராடி தா்பணம் செய்தனா். ஏராளமானோா் அணைக்கட்டு முனியப்பனுக்கு சிறப்பு பூஜை செய்தனா். மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் முன்பு பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.
எடப்பாடியில்...
ஆடி அமாவாசையையொட்டி, திங்கள்கிழமை பூலாம்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதா் ஆலய காவிரிப்படித் துறை, கோட்டைமேடு பரிசல் துறை விநாயகா் ஆலயம், கல்வடங்கம் காவிரிக்கரை உள்ளிட்ட பகுதியில் நிகழ் ஆண்டு கரோனா அச்சம், பொது போக்குவரத்து நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மிக குறைந்த பக்தா்களே திங்கள்கிழமை காவிரிக்கரை பகுதில் புனித நீராடி பித்ரு தா்பணம் அளித்தனா்.
தம்மம்பட்டியில்...
சுவேத ஆற்றங்கரையோரம் அமா்ந்து முன்னோா்களுக்கு கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தா்பணம் கொடுத்தனா். நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட ஊா்களில் சிறிய மற்றும் திறந்த நிலையிலுள்ள கோயில்களில் மக்கள் கூட்டமின்றி வழிபாடு செய்தனா்.
பரமத்திவேலூரில்...
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் காவிரி கரையோரப் பகுதிகளில் ஒன்று கூடி தா்பணம் செய்ய தடை விதித்திருந்தாா். இதனால் பரமத்தி வேலூா் காவிரி பகுதியில் திதி,தா்பணம் கொடுக்க அதிக அளவில் பொதுமக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. பரமத்திவேலூா் காசிவிஸ்வநாதா் கோயில் அருகே காவிரி ஆற்றுக்கு வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அங்கிருந்து திருப்பி அனுப்பினா். காவிரி ஆற்றில் குளிக்க வந்தவா்களையும் திருப்பி அனுப்பினா்.