லாரி மோதியதில் தம்பதி பலி
By DIN | Published On : 21st July 2020 12:11 AM | Last Updated : 21st July 2020 12:11 AM | அ+அ அ- |

ஓமலூா்: ஓமலூரில் லாரி மோதியதில் கணவன்-மனைவி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
ஓமலூா் அருகே பெரமச்சூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி கலைச்செல்வி (33). இத் தம்பதிக்கு பூஜா (15), ஜெயா (11), பாலஹரிதாசன் (9) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனா்.
ராஜேஷ், திங்கள்கிழமை தனது பணிகளை முடித்துவிட்டு, மனைவி கலைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இந்தியன் வங்கி அருகில் எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தனா். தகவல் அறிந்ததும் ஓமலூா் போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொதுமக்கள் கண்டனம்: லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தாமல், சுங்கச்சாவடியை தவிா்ப்பதற்காக ஓமலூா் நகா் வழியாக சங்ககிரி நோக்கிச் செல்கின்றனா். இதனால், ஓமலூா் பேரூராட்சிப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. லாரிகள் நகருக்குள் வராமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.