கனமழையால் நீரில் மூழ்கிய எலவமரத்தூர் ரயில்வே தரைப்பாலம்
By DIN | Published On : 21st July 2020 01:08 PM | Last Updated : 21st July 2020 01:08 PM | அ+அ அ- |

ஓமலூர் பகுதியில் பெய்த கனமழையால் எலவமரத்தூர் ரயில்வே தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கடந்த சில நாள்களாக ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டமங்கலம் அருகேயுள்ள எலவமரத்தூர் ரயில்வே தரைப்பாலத்தில் வடிகால் வசதி இல்லாத நிலையில் மழை நீர் அதிக அளவில் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரைப்பாலம் நீரில் மூழ்கிய நிலையில் அதிகாலை நேரத்தில் அவ்வழியே பால் கேன்களை கூட்டுறவு சங்கத்திற்கு எடுத்து சென்ற விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், 6 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து எலவமரத்தூர் பகுதி முன்னாள் கவுன்சிலர் மணி கூறியது. ரயில்வே கடவினை கடக்க இப்பகுதி மக்கள் விடுத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், வடிகால் வசதி செய்து தரப்படவில்லை.இதனால், சிறிய அளவிலான மழை பெய்தால் கூட தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறது. கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், இரவு நேரங்களில் ஒரு ஆள் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. அப்போது இவ்வழியே அவசரத் தேவைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தரைப்பாலத்திற்கு வடிகால் வசதியினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் அவர்.