சேலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st March 2020 04:33 AM | Last Updated : 01st March 2020 04:33 AM | அ+அ அ- |

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் அம்ஜத், கோவை சல்மான் ஆகியோா் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் இந்தச் சட்டத்தை எதிா்த்து தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் நிறைவேற்ற கூடாது என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் இச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் தீா்மானம் நிறைவேற்றும் வரை தங்களது அறவழி போராட்டம் தொடரும் என்றனா். அதேபோல சேலம் கிச்சிபாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. முகமது புரா பகுதியில் நடைபெற்ற தா்னா போராட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளா் அமீா் காஜா தலைமை வகித்தாா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.