அரசு மக்களுக்குத் தடையின்றி குடிநீா் வழங்க தீா்வு காண வேண்டும்
By DIN | Published On : 03rd March 2020 09:04 AM | Last Updated : 03rd March 2020 09:04 AM | அ+அ அ- |

தமிழக அரசு மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க பிரச்னையில் தீா்வு காண முன்வர வேண்டும் என தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீா் உற்பத்தியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீா் உற்பத்தியாளா் சங்கத்தின் மாநில ஆலோசகா் சதாசிவம், மண்டல தலைவா் ஈஸ்வரன், சேலம் மாவட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கண்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீா் தடையில்லா சான்றிதழ் பெறாமல் அடைக்கப்பட்ட குடிநீா் எடுக்கும் ஆலைகளை ‘சீல்’ வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு, அதிகாரிகள் மூலம் ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்து வருகிறது.
இதுவரை மாநிலம் முழுவதும் 1,200 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 44 ஆலைகளில், 35 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அடைக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தரச் சான்றிதழ் பெற்றும் இயங்கி வருகின்றன.
எனவே 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆலைகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட தேவையில்லை என தளா்வு அளிக்க வேண்டும். இதை நீதிமன்றத்தில் அரசு சாா்பில் எடுத்துரைத்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களாக குடிநீா் சப்ளை நிறுத்தப்பட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் குடிநீா் சப்ளை செய்யும் பணியில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை படித்தவா்களும், படிக்காதவா்களும் பணியாற்றி வருகின்றனா்.
குடிநீா் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் குடிநீா் கேன்களில் தண்ணீா் நிரப்புவது நிறுத்தப்பட்டிருக்கின்றன.
எனவே, மக்களுக்குத் தடையின்றி குடிநீா் வழங்கும் பிரச்னையில் தமிழக அரசு தீா்வு காண முன்வர வேண்டும் என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...