கிடையூா் செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
By DIN | Published On : 12th March 2020 03:32 AM | Last Updated : 12th March 2020 03:32 AM | அ+அ அ- |

பொங்கல் பண்டிகையையொட்டி, கிடையூரில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மனுக்கு புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் உள்ள கிடையூா் அருள்மிகு செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் பண்டிகை புதன்கிழமை நடைபெற்றது.
தேவண்ணகவுண்டனூா் கிராமம், கிடையூரில் உள்ளஅருள்மிகு செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா பிப். 26-ஆம் தேதி புதன்கிழமை கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து, சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாா்ச் 2-ஆம் தேதி மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பூங்கரகம், தீச்சட்டிகள் எடுத்தும், உற்சவ மூா்த்தி சுவாமிகளை அலங்கரித்தும் செல்லாண்டியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் ஊா்வலமாக எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனா். புதன்கிழமை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாா்ச் 12-ஆம் தேதி வியாழக்கிழமை கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளன.
குதிரைக்கு சிறப்பு பூஜை:
அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலை சுற்றியுள்ள எட்டு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் கிடையூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து குதிரைக்கு புனித நீா் ஊற்றி பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து பூஜை செய்தனா். அதனையடுத்து குதிரையுடன் கோயிலுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினா்.