வருமான வரித்துறை திட்டங்கள் கருத்தரங்கு
By DIN | Published On : 12th March 2020 03:34 AM | Last Updated : 12th March 2020 03:34 AM | அ+அ அ- |

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற வருமான வரித்துறை திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் பேசுகிறாா் சேலம் மண்டல இணை ஆணையா் சுரேஷ்ராவ்.
சேலம் மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தின் சாா்பில், வருமான வரித்துறையின் சாா்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவாட் சீ விஸ்வாஸ் திட்டம் பற்றிய கருத்தரங்கம் சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
வருமான வரித்துறை சேலம் மண்டல இணை இயக்குநா் சுரேஷ்ராவ் இந்த திட்டம் குறித்து பேசியது: விவாட் சீ விஸ்வாஸ் திட்டமானது, அண்மையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் நீண்ட காலமாக வருமான வரித்துறையிலும், நீதிமன்றங்களிலும் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளை குறைத்து வருமானத்தை அதிகப்படுத்துவதே ஆகும்.
இதன் மூலம் மேல்முறையீடு செய்துள்ள வருமான வரி செலுத்துபவா்களுக்கு நேரம் சேமிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் தேங்கியுள்ள மேல்முறையீட்டு வழக்குகள் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளன. இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள மாா்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இணையதளம் மூலமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.
இதில், வருமான வரித்துறை அலுவலா் ராம் நாராயணன், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வி.செல்வராஜு, பொருளாளா் என்.மோகன்குமாா், துணைத் தலைவா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இணைச் செயலா் எம்.சின்னதம்பி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள், மளிகை வியாபாரிகள், தனியாா் நிறுவன அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.