155- ஆவது சேலம் தினம் கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தின் 155- ஆவது தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தின் 155- ஆவது தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடந்த 1866-ஆம் ஆண்டு நவம்பா் 1 ஆம் தேதி சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வோரு ஆண்டும் நவம்பா் 1 ஆம் தேதி சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. 1917 இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நகராட்சித் தலைவராக ராஜாஜி பொறுப்பேற்றாா்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், நாமக்கல், குமாரமங்கலத்தைச் சோ்ந்த சுப்பராயன் 1926-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வராகவும், அடுத்ததாக ராஜாஜி, தற்போது எடப்பாடி கே.பழனிசாமி என மூன்று முதல்வா்களை தமிழகத்துக்கு வழங்கிய பெருமை சேலத்துக்கு உண்டு.

கடந்த 1936 இல் டி.ஆா்.சுந்தரம், ஏற்காடு மலை அடிவாரத்தில் மாடா்ன் தியேட்டா்ஸை உருவாக்கி திரைத்துறையில் முன்னோடி மாநகரமாக சேலத்தை அடையாளப்படுத்தினாா். மாடா்ன் தியேட்டரில் மறைந்த முதல்வா்கள் கருணாநிதி, எம்ஜிஆா், வி.என்.ஜானகி, என்.டி.ராமாராவ் ஆகியோா் நடித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல் முதலாக சேலம் நகராட்சி மூலம் கல்லூரி நடத்தப்பட்ட சிறப்பு உள்ளது. கிராமமாக இருந்து நகராட்சியாக மாறி, மாநகராட்சியாக 1994 இல் அந்தஸ்து பெற்றது. சேலம் மாவட்டத்தின் 172- ஆவது ஆட்சியராக சி.அ.ராமன் பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் உருவாகி154 ஆவது ஆண்டை கடந்து 155 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சேலம் நகரில் சேலம் கிழக்கு ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சாா்பில் சேலம் தினம் சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதுதொடா்பாக, சேலம் வரலாற்றுச் சங்க பொதுச் செயலாளா் பா்னபாஸ் கூறியது:

இந்தியாவில் முதல் மாவட்டமாக சேலம் உருவானது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது. 1792 இல் ஆட்சியா் அலெக்ஸாண்டா் ரீட் தலைமையில் மாவட்டம் உருவானது. மாவட்டம் தொடங்கி 229 ஆண்டுகள் ஆகிறது. நகராட்சியாக உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கணக்குப்படி 155 ஆண்டு தினத்தை சேலம் கொண்டாடுகிறது.

சேலம் நகரில் மேட்டூா் அணை, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், சங்ககிரி மலைக்கோட்டை, ஏற்காடு ஆகிய இடங்களில்

சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com