ஓமலூா் அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்
By DIN | Published On : 23rd November 2020 03:24 AM | Last Updated : 23rd November 2020 03:24 AM | அ+அ அ- |

ஓமலூா் அருகேயுள்ள காருவள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஓமலூா் அருகே கெயில் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நிலத்தில் இறங்கி நின்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா், காடையாம்பட்டி வட்டார கிராம பகுதிகள் வழியாக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூா் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க நிலங்களை கையகப்படுத்தும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், முதல் கட்டமாக காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள மூக்கனூா், மரக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி, செக்காரப்பட்டி, குண்டுக்கல் ஆகிய கிராமங்களில் விளைச்சல் நடைபெறும் நிலங்களை கையகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதனால், எரிவாயு குழாய் அமைக்கப்படும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களின் வகைகள், அதன் மதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியதாக தெரிகிறது. இதையறிந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் நிலங்களில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாய நிலங்களில் திரண்ட கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் இறங்கி, கெயில் நிறுவனத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். தமிழக அரசு எரிவாயு குழாயை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விவசாய நிலத்தில் அமைக்கக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினா். மேலும், எந்த சூழ்நிலையிலும் விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் விவசாயிகள் கூறினா்.