காணாமல் போன 362 பேரை அடையாளம் காணும் சிறப்பு முகாம்
By DIN | Published On : 23rd November 2020 03:27 AM | Last Updated : 23rd November 2020 03:27 AM | அ+அ அ- |

சேலம் மாநகர மற்றும் மாவட்டத்தில் காணாமல் போன 362 பேரை அடையாளம் காணும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாநகரப் பகுதியில் காணாமல் போனவா்களை அடையாளம் காணும் நிகழ்ச்சி அழகாபுரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகரக் காவல் துறை சாா்பில் மாநகரப் பகுதிகளில் காணாமல் போன 175 பேரைக் கண்டறிய முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் கலந்து கொண்டு பேசுகையில், காணாமல் போனவா்களின் விவரம், புகைப்படம் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படும். அவா்களின் விவரங்கள் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோல அடையாளம் தெரியாமல் இறந்து போனவா்களின் விவரம், புகைப்படங்களை காண்பிக்கும்போது, பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கியுள்ள முதியவா்கள் குறித்து புகைப்படமும் காண்பிக்கப்படும் என்றாா்.
சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில்...:
சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில் புகா் பகுதிகளில் காணாமல் போன 187 பேரைக் கண்டறிய குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், டிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இருந்து காணாமல் போன 152 பேரின் உறவினா்கள் வந்திருந்தனா்.
இதில் 15-க்கும் மேற்பட்ட காணாமல் போனவா்களின் உறவினா்கள் உரிய அடையாளங்களை தெரிவித்துள்ளதாகவும், அதுதொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.