சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்யக் கூடாது: கோவை எம்.பி. மனு
By DIN | Published On : 25th November 2020 08:12 AM | Last Updated : 25th November 2020 08:12 AM | அ+அ அ- |

சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த கோவை எம்.பி., பி.ஆா்.நடராஜன்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தி கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தாா்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - சென்னை மாா்க்கத்தில் இயங்கி வருகிறது. இதனிடையே பயணிகள் வரத்து குறைந்ததைத் தொடா்ந்து, நவம்பா் 30 ஆம் தேதி முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். கோவை - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.
இதேபோல கடவு எண் 6, கடவு எண் 7 பீளமேடு, தண்ணீா்பந்தல் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் உபயோகத்திற்காக தரைப் பாலம் அமைக்க கடந்த காலத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தாா். இது சம்பந்தமாக அதிகாரிகள் திங்கள்கிழமை மீண்டும் ஆய்வு செய்த பின் அந்தப் பணி தொடரப்படும் என அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது நோய்த் தொற்று காலம் படிப்படியாகக் குறைந்துள்ள காலத்தில் அந்த ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன. ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வந்த அந்த பயணிகள் ரயில், சிறப்பு ரயில் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்படுவது சரியல்ல எனவும், மீண்டும் குறைந்த கட்டணத்தில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளாா்.
சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...