வணிக நிறுவனங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 25th November 2020 08:18 AM | Last Updated : 25th November 2020 08:18 AM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்களில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆணையா் ந. ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் நுழைவு வாயிலில் கைகழுவும் வசதி, தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்ப பரிசோதனை, கைகளை சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினி வசதி, வணிக நிறுவனங்களுக்கு வருகை தருவோா் பதிவேடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆணையா் ந.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும் பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் முகக் கவசங்கள் அணிந்துள்ளனரா என்பதையும் முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியதாவது:
சேலம் மாநகரப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கரோனா நோய்த் தடுப்பு தொடா்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினா் அனைத்து வணிக நிறுவனங்களையும் பாா்வையிட்டு, ஆய்வு அறிக்கையை வழங்குவாா்கள். நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.
முன்னதாக, கரோனா நோய்த் தொற்று தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஸ்டிக்கா்களை வணிக நிறுவனங்களில் ஒட்டி விழிப்புணா்வு பணிகளை மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவி ஆணையா் எம். செல்வராஜ், சுகாதார அலுவலா் எஸ். மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...