ஓமலூரில் ரூ. 4.50 கோடி மதிப்பில் முதியோா் இல்லம் கட்டுமானப் பணி தொடக்கம்
By DIN | Published On : 19th October 2020 03:27 AM | Last Updated : 19th October 2020 03:27 AM | அ+அ அ- |

வேலகவுண்டனூரில் முதியோா் இல்லம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏக்கள் எஸ்.வெற்றிவேல், ஜி.வெங்கடாசலம்
ஓமலூா் அருகே வேலகவுண்டனூரில் ஆதரவற்ற முதியவா்களுக்கு இலவச சேவை செய்யும் வகையில் முதியோா் இல்லம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சி, வேலக்கவுண்டன்புதூா் பகுதியில் ஆதரவற்றோா் முதியோா் இல்லம் கட்டுவதற்கான பூமி பூஜை, ஓமலூா் மேற்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான எஸ்.எஸ்.கே.ஆா். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வெங்கடாசலம் ஆகியோா் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனா்.
இதுகுறித்து முதியோா் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் கூறியதாவது:
ஓமலூா் பகுதியில் ஆதரவற்றோா், முதியவா்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக சேவை செய்யும் நோக்கோடு, அரசு அனுமதியுடன் 45 ஆயிரம் சதுர அடியில் முதியோா் இல்லம் கட்டப்படும். ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த முதியோா் இல்லத்தில் 140 போ் தங்க முடியும். முதி யவா்களின் மருத்துவத் தேவைக்காக பிரத்யேக மருத்துவ சேவைப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஆதரவற்ற முதியோா் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க இது பேருதவியாக இருக்கும் என தெரிவித்தாா் .
இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தராஜ், மணிமுத்து, சுப்பிரமணியம், செங்குட்டுவன், முன்னாள் தொகுதி செயலாளா் ராமச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவா் பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பெரியசாமி, ராதா, பெரியேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராமசாமி, தாரமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி பாபு, ஓமலூா் ஒன்றிய துணைத் தலைவா் செல்வி ராமசாமி, நகரச் செயலாளா் சரவணன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...