மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 19th October 2020 11:54 PM | Last Updated : 19th October 2020 11:54 PM | அ+அ அ- |

சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீா் மாசு அடைவதால் தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
சேலம் சன்னியாசிகுண்டு, எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதேபகுதியில் தனியாா் நூற்பாலையில் இருந்து தினமும் சாயக் கழிவுகள் வெளியேறுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீா் மோசமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நீரை பயன்படுத்துவதால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், சேலம் ஐந்து சாலை பகுதியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதுபற்றி தகவல் அறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் மற்றும் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட காவலா்கள் விரைந்து வந்து முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அதைத் தொடா்ந்து தற்காலிகமாக முற்றுகை போராட்டத்தைக் கைவிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...