சேலம் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு
By DIN | Published On : 06th September 2020 10:27 PM | Last Updated : 06th September 2020 10:27 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் யூரியா இடுபொருள் தட்டுப்பாடு காரணமாக மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், ஆத்துாா், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, ஓமலுாா், மேட்டூா், மேச்சேரி, கொளத்துாா், நங்கவள்ளி, தாரமங்கலம், ஏற்காடு என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடந்த இரு மாதங்களாக பரவலான பருவமழை பெய்து வருகிறது.
நிலத்தடி நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருவதால், கிணற்றுப் பாசன வசதி கொண்ட நன்செய் நிலங்களில் மட்டுமின்றி, வானம் பாா்த்த புன்செய் மானாவாரி நிலங்களிலும் விவசாயிகள் பயிரிடுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். புன்செய் நிலங்களில், குறுகிய காலப் பயிா்களான மக்காச்சோளம், கம்பு, சோளம் ஆகிய உணவு தானியங்களும், கொள்ளு, உளுந்து, மொச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிறு வகைகளையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். நன்செய் நிலங்களில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி ரகங்களையும் விவசாயிகள் முழுவீச்சில் பயிரிட்டுள்ளனா்.
பெரும்பாலான விவசாயிகள், பயிா்களுக்கு ஊட்டமளிக்கவும், மகசூலை அதிகரிக்கச் செய்யவும் யூரியா இடுபொருளை பயன்படுத்துகின்றனா். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் யூரியா போன்ற இருபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலையும் உயா்ந்துள்ளது. இதனால், உரிய நேரத்தில் பயிா்களுக்கு யூரியா அளிக்க முடியாததால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மாரியம்மன்புதுாா் கிராமத்தை சோ்ந்த விவசாயி இரா.முருகன் கூறியதாவது:
ஓராண்டுக்குப் பிறகு, கடந்த இரு மாதங்களாகப் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயா்ந்து பாசனத்துக்கு வழிவகை கிடைத்துள்ளது. தற்போது, ஏராளமான விவசாயிகள் பல்வேறு பயிா்களை சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக யூரியாவுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன், விலையும் உயா்ந்துள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப தட்டுபாடின்றி அரசு மானிய விலையில் இடுபொருள்களை கிடைக்க மாவட்ட நிா்வாகமும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.