சேலத்தில் அமிலம் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு  

சேலத்தில் குடும்பத்தகராறில் கணவரால் அமிலம் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான பெண் இறந்தார்.  
சேலத்தில் அமிலம் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு  
சேலத்தில் அமிலம் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு  
Updated on
1 min read

சேலத்தில் குடும்பத்தகராறில் கணவரால் அமிலம் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான பெண் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். ஏசுதாஸுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ரேவதி நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இது தொடர்பாக சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகார் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ரேவதி தனது தாயுடன் திங்கள்கிழமை மாலை வந்திருந்தார்.

விசாரணை முடிந்த பிறகு  ரேவதி, தாய் ஆராயி உடன் வையப்பமலை செல்வதற்காக சேலம் நகர பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது 
அங்கு வந்த ஏசுதாஸ், தனது மனைவி ரேவதி மீது அமிலம் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். அமிலம் வீசியதில் படுகாயமடைந்த ரேவதிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 70 சதவீதம் அளவிற்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் சிகிச்சை பலனின்றி ரேவதி அரசு மருத்துவமனையில்  உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவின்பேரில் உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அமிலம் வீசி தலைமறைவான ஏசுதாஸை கரூரில் அவரது உறவினர் வீட்டில் கைது செய்தனர். திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கணவரோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பதால் விவாகரத்து வேண்டும் என்று ரேவதி திட்டவட்டமாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஏசுதாஸ் இதுபோன்ற வெறிச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com