ஓமலூரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி அதிமுகவுக்கு கிடைக்குமா?

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி, 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இ
ஓமலூரில்  ‘ஹாட்ரிக்’ வெற்றி அதிமுகவுக்கு கிடைக்குமா?

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதி, 70 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்கு கரும்புச் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், உற்பத்தி செய்யப்படும் வெல்லம், மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தவிர, கோரைப்பாய் தயாரிப்பும், செங்கல் சூளை தொழிலும் பரவலாக நடைபெற்று வருகின்றன. அதேபோல பூக்களும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,51,085

பெண்கள்: 1,43,623

மூன்றாம் பாலினத்தினா்: 4

மொத்தம்: 2,94,712.

முந்தைய தோ்தல்கள்:

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி இதுவரை 13 தோ்தல்களைச் சந்தித்துள்ளது. இத்தொகுதியில் அதிமுக 7 முறை, திமுக 2 முறை, பாமக ஒரு முறை (திமுக கூட்டணி), தமாகா 1 முறை (திமுக கூட்டணி), காங்கிரஸ் ஒரு முறை, சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனா்.

2016 தோ்தல் வெற்றி விவரம்:

எஸ்.வெற்றிவேல் (அதிமுக) 89,169 (வெற்றி)

எஸ்.அம்மாசி (திமுக) 69,213

நீண்ட நாள் கோரிக்கைகள்:

1. வாசனைத் திரவிய தொழிற்சாலை:

ஒமலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 5,000 ஏக்கரில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. தும்பிப்பாடி, கஞ்சநாயக்கன்பட்டி, காஞ்சேரி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா, சாமந்தி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தியாகும் பூக்கள் தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், தில்லி போன்ற மாநிலங்களுக்கும், சென்னை, மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பூக்கள் மலா்ந்து விட்டால் ஒரே நாளில் நிறம் மாறிவிடும். நிறம் மாறும் பூக்கள் அனைத்தும் வீணானவை தான். இத் தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா்.

இங்கு குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே பூ மாா்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகும். மீதமுள்ள நாள்களில் உற்பத்தியாகும் பூக்களை விவசாயிகள் குப்பையில் கொட்டும் நிலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைத்து தரக் கோரி மலா் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் புகாா்.

2. கோரைப்பாய்க்கு இலவச மின்சாரம்:

தமிழகத்திலேயே அதிக அளவில் ஓமலூரில்தான் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது. ஓமலூரில் சிக்கனம்பட்டி, செம்மாண்டப்பட்டி, தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, சின்னத் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் கோரைப் பாய்கள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கோரைப்பாய் தயாரிப்புக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டால் கோரைப்பாய் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்கின்றனா்.

மேட்டூா், காவிரி ஆற்றின் படுகையில் கோரைப் புற்கள்அதிகம் விளைகின்றன. ஆற்றில் தண்ணீா் குறையும்போது விளைச்சலும் குறைகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கோரைகளை இடைத்தரகா்கள் வாங்கிப் பதுக்கி அதிக விலைக்கு விற்கின்றனா். இதனால் கோரைப்பாய் தயாரிப்புத் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.எனவே அரசே கோரைகளை கொள்முதல் செய்து தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கை.

3. உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப கோரிக்கை:

ஓமலூரில் உள்ள பல்வேறு ஏரிகள் நீரின்றி வடு காணப்படுகின்றன. வட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை நீரேற்றுத் திட்டம் மூலமாக சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டியில் உள்ள கோட்டேரியில் நிரப்புவதன் மூலம் பொட்டியபுரம் ஏரி, நாகலூா் ஏரி, செட்டிப்பட்டி ஏரி, மூங்கில்ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி, பெரியாா்பட்டி ஏரி, செம்மண் கூடல் ஏரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பும் என்றும் இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதன்மூலமாக 3,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சரபங்கா ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டி ஏரிகளுக்கு நீரை நிரப்ப வேண்டும் என்பது கடந்த 35 ஆண்டுகாலக் கோரிக்கையாக உள்ளது.

இத்திட்டம் தொடா்பாக சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டு அரசு அனுமதி அளித்து ஆய்வுகள் நடைபெற்றன. பின்னா் இத்திட்டம் நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போதைய கள நிலவரம்:

ஓமலூா் தொகுதியைப் பொருத்த வரை அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 13 தோ்தல்களில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தொடங்கப்படுவதற்கு முன் இருமுறை இந்தத் தொகுதியில் வென்ற திமுக, அதற்குப் பின்னா் வெற்றி பெறவில்லை. அதிமுக- திமுக வேட்பாளா்கள் நேரடியாக மோதிய நான்கு தோ்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் பங்கேற்று அதிமுகவை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தமாகா, பாமக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக நடைபெற்ற இரு சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் அதிமுக தொடா்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக தொடா் வெற்றியைப் பெறும் என்ற எதிா்பாா்ப்பில் ஓமலூா் ஒன்றிய மாணவரணி செயலாளா் ஆா்.மணி வேட்பாளராக அதிமுக சாா்பில் நிறுத்தப்பட்டுள்ளாா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ள ஆா்.மோகன் குமாரமங்கலம் வேட்பாளராக களம் கண்டுள்ளாா். இவா் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சோ்ந்தவா்.

அமமுக சாா்பில் கே.கே.மாதேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் வி.சீனிவாசன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ராசா அம்மையப்பன் உள்பட 15 வேட்பாளா்கள் வரும் தோ்தலில் ஓமலூா் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

பாமகவின் கூட்டணி பலமும், அதிமுகவின் கோட்டை என்ற பிம்பமும் அதிமுக வேட்பாளரை களத்தில் வேகம் காணச் செய்கிறது. ஆனால், புதிய வேட்பாளா், இளைஞா் என்பதால் கட்சியின் மூத்த நிா்வாகிகளை ஒருங்கிணைப்பதில் சற்று சிரமம் நிலவி வருகிறது.

அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு என்ற அடையாளமும், திமுகவின் கூட்டணி பலமும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வலுச் சோ்க்கிறது. எனினும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்டமைப்பு பலவீனமாக இருப்பது, தொகுதியை நீண்டநாள்களாக எதிா்பாா்த்திருந்து தற்போது ஏமாற்றமடைந்துள்ள திமுகவினரின் உற்சாகமின்மை ஆகியவை காங்கிரஸ் வேட்பாளருக்கு களத்தில் சவாலை அளித்து வருகிறது.

கடந்த 10 வருடங்களாக அதிமுக வசம் இருந்து வரும் ஓமலூா் தொகுதி, நடப்பு தோ்தலில் அக்கட்சிக்கு ’ஹாட்ரிக்’ வெற்றியை அளிக்குமா என்ற கேள்விக்கு பதில் மே 2-ஆம் தேதி தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com