சேலத்தில் எரிவாயு உருளை வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி 5 ஆக உயர்வு

சேலத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில், இடிபாட்டில் சிக்கியிருந்த தீயணைப்பு வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்ததில் இடிந்த நிலையில் உள்ள வீடு
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்ததில் இடிந்த நிலையில் உள்ள வீடு

சேலம்: சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில், இடிபாட்டில் சிக்கியிருந்த தீயணைப்பு வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கருங்கல்பட்டி பாண்டு அரங்கநாதசாமி தெருவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இதில் வெங்கட்ராஜன் என்பவரின் வீடும், கோபி என்பவரின் வீடும், பத்மநாபன் என்பவர் வீடும் இடிந்து விழுந்தது.

இதையும் படிக்கலாமே.. இன்று மிக உகந்த நாள்: எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

பத்மநாபன் சேலம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தவர். இடிபாடுகளில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தாரும் சிக்கியிருந்தனர். இவரை மீட்கும் பணி நடந்து வந்தது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இந்தப் பகுதியில் மொத்தம் ஐந்து வீடுகள் உள்ள நிலையில், சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், அருகருகே இருந்த மூன்று வீடுகள் சரிந்துள்ளன. மற்ற இரண்டு வீடுகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டட இடிபாட்டில் சிக்கிய ராஜலட்சுமி (80) என்ற மூதாட்டியின் உடல் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டது.

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்த தகவலறிந்து அப்பகுதியில் திரண்ட அப்பகுதி பொதுமக்கள்.
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கேஸ் வெடித்த தகவலறிந்து அப்பகுதியில் திரண்ட அப்பகுதி பொதுமக்கள்.

இடிபாட்டில் சிக்கி காயமடைந்த வெங்கட்ராஜன், இந்திராணி, மோகன்ராஜ், நாகசுதா, கோபால், தனலட்சுமி, சுதர்சன், கணேசன், உஷாராணி, லோகேஷ், முருகன் கோபி ஆகிய 12 பேர் காயம் அடைந்தனர். இதில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் தீக்காயமடைந்த கோபி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் வந்து அவர்களும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடம் வந்து விசாரித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com