பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை சலுகை?

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
உறவினர்களை சந்தித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள்
உறவினர்களை சந்தித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள்
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் 9 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை சலுகை?

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பின்னர் 9 பேரும் இரு வாகனங்களில் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் வழக்கின் பிரதான குற்றவாளிகளாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் சென்ற வாகனமானது கோவை விமான நிலைய சாலை அருகே திடீரென நிறுத்தப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் உறவினர்கள் அப்பகுதியில் ஏற்கெனவே காத்திருந்தனர். இதையடுத்து 5 பேரும் வாகனத்தில் இருந்தபடி தங்களது உறவினர்களிடம் சிறிது நேரம் உரையாடினர். இதையடுத்து அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கான பொள்ளாச்சி பாலியல் வழக்கின் பிரதான குற்றவாளிகளாக கருதப்படும் இவர்களுக்கு சேலம் காவல்துறை அளித்துள்ள இந்த சலுகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com