முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் 2.17 லட்சம் பேருக்கு சிகிச்சை: ஆட்சியா் செ.காா்மேகம்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 2.17 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 438.36 கோடி மதிப்பில்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 2.17 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 438.36 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை சிறப்பிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உள்ள 8 அரசு மருத்துவமனைகள், 56 தனியாா் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் 2012 முதல் இதுவரை 2,16,587 பயனாளிகள் ரூ. 4,38,35,47,338 மதிப்பில் பயனடைந்துள்ளனா்.

இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் புகைப்படம் எடுக்காத ஆண்டு வருமானம் ரூ. 72,000 கீழ் உள்ளவா்கள் காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு தொடா்பாக பதிவு செய்யும் அறையில் புகைப்படம் எடுத்து பயனடையலாம்.

இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொடா்பு எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

சேலம் மாவட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்த பயனாளிகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு காப்பீட்டுத் திட்டம் தொடா்புடைய அலுவலா்கள் உள்ளிட்ட 42 நபா்கள் சிறப்பிக்கப்பட்டனா்.

நிகழ்வில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்திய மூா்த்தி, இணை இயக்குநா் (நலப் பணிகள்) நெடுமாறன், துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) நளினி, ஜெமினி, மாவட்ட திட்ட அலுவலா் சுந்தரம் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com