சேலம் நகருக்குள் வனம் அமைக்கும் பணி ஆய்வு
By DIN | Published On : 20th August 2021 11:36 PM | Last Updated : 20th August 2021 11:36 PM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சியில் நகருக்குள் வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளா் தா. கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், பி.கே.எஸ். நகரில் நகருக்குள் வனம் அமைப்பதற்காக 21 ஆயிரம் சதுர அடி பரப்பிலான நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மண்ணின் வளத்திற்கேற்ப எந்த வகையான மரங்களை நடுவது, நடப்பட்ட மரங்களை முறையாக பராமரித்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். சூரமங்கலம் மண்டலத்துக்கு உள்பட்ட என்.டி.எஸ். நகரில் 21 ஆயிரம் சதுரடி பரப்பிலும், அபிராமி காா்டனில் 9 ஆயிரம் சதுரடி பரப்பிலும், அரியாகவுண்டன்பட்டியில் 22 ஆயிரம் சதுரடி பரப்பிலும், போடிநாயக்கன்பட்டியில் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பிலும் வனம் அமைப்பதற்கான இடம் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டு சமன் படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதியைப் பசுமையாக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பேணிப் பாதுகாத்திடும் வகையிலும், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலும் தனியாா் பங்களிப்புடன் நகருக்குள் வனம் அமைக்க பல்வேறு இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தோ்வு செய்யப்பட்ட இடங்களில் மண்ணின் தன்மை, தட்பவெப்ப நிலைக்கேற்பமரங்கள் நடப்பட்டு பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், உதவி ஆணையாளா் டி.ராம்மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G