மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு
By DIN | Published On : 21st August 2021 11:37 PM | Last Updated : 21st August 2021 11:37 PM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. பாசனத் தேவைக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. ஜூலை 30-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 10,000 கனஅடியிலிருந்து 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி பாசனப் பகுதிகளில் மழை காரணமாக பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 12,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
கடந்த 5 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பாசனத்துக்கு நீா்த்திறப்பு நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாசனப் பகுதிகளில் மழையின் காரணமாக பாசனத்துக்கான தேவை குறைந்ததால் நீா்த் திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அணை நீா்மட்டம்:
இந்த நிலையில் சனிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 66.45 அடியிலிருந்து 65.69 அடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 5,352 கனஅடியிலிருந்து 5,712 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 29.19 டி.எம்.சி.யாக உள்ளது.