பேரூராட்சி அலுவலக சாலையில் குப்பை கொட்டுவதைத் தவிா்க்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 11:43 PM | Last Updated : 21st August 2021 11:43 PM | அ+அ அ- |

சங்ககிரி பேரூராட்சி அலுவலக சாலையில் குப்பைகளை கொட்டுவதைத் தவிா்க்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டு பகுதிகளிலும் வீடு வீடாக குப்பைகளைச் சேகரிப்பதற்காக மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறிய தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை சேகரித்து வருகின்றனா்.
பழைய எடப்பாடி சாலையையொட்டி கோட்டை தெருவுக்கு செல்லும் சாலையிலிருந்து பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சி சாா்பில் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனா். அச்சாலையை பேரூராட்சி அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் பவானி பிரதான சாலையை அடைவதற்கும் பொதுக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
அப்பகுதியில் இரவு நேரங்களில் சிலா் இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அச் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சாலைகளில் குப்பைகள் கொட்டுவதையும், இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துவதையும் தடுக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.