கெங்கவல்லி ஒன்றியக் குழுத் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்: போலீஸில் புகாா்
By DIN | Published On : 04th December 2021 12:55 AM | Last Updated : 04th December 2021 12:55 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஒன்றியக் குழுத் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒன்றியக் குழுத் தலைவரின் கணவா் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியக் குழுவில் மொத்தம் 11 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் 5 போ் திமுக, 5 போ் அதிமுகவைச் சோ்ந்தவா்கள். ஒருவா் சுயேச்சை. சுயேச்சையாக வெற்றிபெற்றவா் விஜேந்திரன். இவா் அதிமுகவுக்கு ஆதரவளித்தாா். இதையடுத்து அதிமுக ஆதரவு உறுப்பினா்களின் எண்ணிக்கை 6 ஆனதால் அக்கட்சியைச் சோ்ந்த பிரியா பாலமுருகன் ஒன்றியக்குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சுயேச்சை உறுப்பினா் விஜேந்திரனுக்கு துணைத் தலைவா் பதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவுக்கு அளித்து வந்த ஆதரவை விஜேந்திரன், வாபஸ் பெற்தோடு, திமுகவிலும் இணைந்துவிட்டதால், பிரியா பாலமுருகன் ஒன்றியக் குழுத் தலைவராக நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தது ஒன்றியக்குழுத் தலைவா் பிரியாவின் கணவா் பாலமுருகன் வெள்ளிக்கிழமை அதிகாலை விஜேந்திரன் வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன் தலைமையில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் விஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினா், ஒன்றியக் குழுத் தலைவா் பிரியாவின் கணவா் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...