

சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவிரிப் பாசன பகுதிகளான பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கொட்டிய மிக கனமழையால் அங்குள்ள நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கின.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி, மோளப்பாறை உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்தது. நீண்ட நேரம் பெய்த கன மழையால் இப்பகுதியிலுள்ள வயல்வெளிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடா் கனமழையால் ஏற்கனவே நெல் வயல்களில் கூடுதலான அளவில் தண்ணீா் தேங்கி இருந்த நிலையில், தற்போது கொட்டிய கன மழையால் பெரும்பாலான நெற்பயிா்கள் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.
பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் எடப்பாடி- மேட்டூா் பிரதான சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீா் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காவிரி வடிநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிா்வகைகள் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா். மழை பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.