16 ஆண்டுக்குப் பின் வாழப்பாடி பாப்பான் ஏரி நிரம்புகிறது: உபரிநீர் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

வாழப்பாடி:வாழப்பாடி பேரூராட்சி காளிம்மன் நகர் பாப்பான் ஏரி, 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வருகிறது.
பாப்பான் ஏரி.
பாப்பான் ஏரி.

வாழப்பாடி:வாழப்பாடி பேரூராட்சி காளிம்மன் நகர் பாப்பான் ஏரி, 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வருகிறது. இருந்த சுவடே தெரியாத அளவிற்கு சிதைந்த போன ஏரி உபரிநீர் வாய்கால், வருகால், மறுகால் மற்றும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. 
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன்நகரில் 12.16 ஹெக்டேர் (30 ஏக்கர்) பரப்பளவில் பாப்பான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, சேசன்சாவடி, வெள்ளாளகுண்டம் மற்றும் முத்தம்பட்டி அமனாக்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகளால் நீர்வரத்து பெறுகிறது. போதிய மழையில்லாததாலும், நீரோடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சுருங்கிப்போனதாலும், கடந்த 16 ஆண்டுக்கும் மேலாக பாப்பான் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. 2005ஆம் ஆண்டுக்கு பிறகு ஏரியில் தண்ணீர் தேங்கவில்லை. வறண்டு கிடந்த இந்த ஏரியில், அரசு அனுமதி பெற்றும், அனுமதியின்றியும், மண் வெட்டி எடுக்கப்பட்டதால், நீர்பிடிப்பு பகுதி முழுவதும் குழியும் குட்டையுமாக மாறி கிடந்தது. 
இதனால், மழை காலத்தில் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஏரிக்குள் இருக்கும் குட்டைகளில் தேங்கியது. இரு ஆண்டுக்கு முன் வாழப்பாடி நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் வாயிலாக, பாப்பான் ஏரிக்கு வரும் முத்தம்பட்டி நீரோடை சீரமைக்கப்பட்டது. ஏரியின் வடமேற்கு பகுதியும் துார்வாரப்பட்டது. இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு பெய்த பருவமழையால், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என்றாலும், நீரூற்று ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக பாப்பான் ஏரிக்கு ஊற்று நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாப்பான் ஏரி 16 ஆண்டுக்கு பின் முதன் முறையாக, முழுவதும் ஊற்று நீராலேயே ஏரி நிரம்பி வருகிறது. நீரோடைகளில் நீர்வரத்து தொடர்ந்தால் ஒரு வாரத்திற்குள் பாப்பான் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி உபரிநீர் வெளியேறும் வாய்க்கால், வருகால், மறுகால் மற்றும் ஏரிப்பாசன வாய்க்கால் உள்ளிட்ட பெரும்பாலான வாய்க்கால்கள் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு சிதைந்து விட்டன. இதனால், நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தாலோ, நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ, ஏரி நிரம்பினால் உபரிநீர் வெளியேறி, குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாப்பான் ஏரி உபரிநீர் வாய்கால் மற்றும் வருகால், மறுகால் மற்றும் பாசன வாய்க்கால்கள், மதகுகளை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி காளியம்மன் நகர் பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: வாழப்பாடி பாப்பான் ஏரி நீர் வரத்து பெறும் நீரோடைகளும், ஏரி வருகால், மறுகால் வாய்க்கால்கள், பாசன கிளை வாய்க்கால்கள், உபரிநீர் வாய்க்கால் மற்றும் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. 16 ஆண்டுக்கு பின் தற்போது ஏரியில் ஊற்றுநீர் வந்து தேங்கியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்தால் ஒரு வாரத்திற்குள் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும். ஆனால், உபரிநீர் வாய்க்கால் சீரமைக்கப்படாமல் சிதைந்து கிடப்பதால், தண்ணீர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரி வாய்க்கால்களை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com