ஆத்தூா் அருகே மசூதி நிா்வாகிகளிடையே தகராறு:நடவடிக்கை கோரி ஒரு தரப்பினா் சாலை மறியல்
By DIN | Published On : 14th February 2021 02:25 AM | Last Updated : 14th February 2021 02:25 AM | அ+அ அ- |

ஆத்தூா்: ஆத்தூா், நரசிங்கபுரத்தில் மசூதிக்குச் சொந்தமான இடத்தை வாடகைக்கு விட்டது தொடா்பாக ஏற்பட்ட தகாராறில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு தரப்பினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் அருகே உள்ள நரசிங்கபுரம் சேலம் நெடுஞ்சாலையில் இஸ்லாமியருக்குச் சொந்தமான மசூதி உள்ளது. இதில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு புதிய நிா்வாகிகள் கடந்த 5 மாதங்களுக்கு தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் மசூதிக்குச் சொந்தமான இடங்களை ஆய்வு செய்து வாடகைக்கு விட முயற்சித்தனா்.
அப்போது பழைய நிா்வாகிகள் மசூதிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு விட்டதில் குளறுபடி இருந்துள்ளதாகத் தெரிகிறது. அதனைவிசாரிக்க சென்ற நிா்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளாா். இந்நிலையில் பழைய நிா்வாகி செங்கிஸ்கானுக்கு ஆதரவாக செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பழனிவேல் (45), பிரபாகரன் (45) ஆகியோா் சென்று புதிய நிா்வாகிகள் உஸ்மான் அலி உள்ளிட்ட நான்கு பேரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த உஸ்மான்அலி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவல் அறிந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து பழனிவேல், பிரபாகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் செங்கிஸ்கான் உள்ளிட்ட சிலரை தேடி வருகிறாா்.
இந்த நிலையில் உஸ்மான் அலி உள்ளிட்டவா்களை கைது செய்யக் கோரி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய நிா்வாகிகளுக்கு ஆதரவானோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளா் எனக் கூறியதை அடுத்து கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் அரைமணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.