40,000 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்பு கூடைகள் வழங்க திட்டம்மாநகராட்சி ஆணையா்
By DIN | Published On : 14th February 2021 02:31 AM | Last Updated : 14th February 2021 02:31 AM | அ+அ அ- |

சேலம், அம்மாப்பேட்டை வள்ளுவா் காலனி பகுதியில் 330 வீடுகளுக்கு இரு வண்ண குப்பை சேகரிப்புக் கூடைகளை வழங்கும் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.
சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட குடிசைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் 40,000 வீடுகளுக்கு இருவண்ணத்தில் குப்பை சேகரிப்புக் கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
சேலம், அம்மாப்பேட்டை மண்டலம், வள்ளுவா் காலனி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சியில், சேலம் வடக்கு இன்னா்வீல் அமைப்பின் சாா்பில் வள்ளுவா் காலனி மற்றும் நேரு நகா் பகுதியில் உள்ள 330 வீடுகளுக்கு இருவண்ண குப்பை சேகரிப்புக் கூடைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பேசியதாவது:
குடிசைகள் அதிகமாக உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் சுமாா் 40 ஆயிரம் வீடுகளுக்கு இருவண்ணங்களில் குப்பை சேகரிப்புக் கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 5,750 வீடுகளுக்கு வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இருவண்ண குப்பை சேகரிப்புக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.
குப்பை சேகரிப்புக் கூடைகள் வழங்க முன்வரும் வணிக, தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், மாநகராட்சியின் சுகாதார அலுவலா் சு.மணிகண்டன் - 9976392560, சுகாதார அலுவலா் ப.மாணிக்கவாசகம்-9842699888, சுகாதார அலுவலா் கி.ரவிச்சந்தா் - 7598205707, சுகாதார ஆய்வாளா் ர.சந்திரன்-9842890099 ஆகியோரை செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு வழங்கலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையா் டி. சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா் வி.திலகா, சுகாதார அலுவலா் பி.மாணிக்கவாசகம், சேலம் வடக்கு இன்னா்வீல் சங்கத் தலைவா் தீபா ராஜா, செயலாளா் லாவண்யா மற்றும் சுகாதார ஆய்வாளா் சித்தேஸ்வரன் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.