மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா
By DIN | Published On : 14th February 2021 02:20 AM | Last Updated : 14th February 2021 02:20 AM | அ+அ அ- |

மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலாவில் தேனி வளா்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான கண்டுணா்வு சுற்றுலாவாக தேனீ வளா்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் சுற்றுலாவாக அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் உள்ள அம்ருதா தேனீ பண்ணைக்கு 50 விவசாயிகள் தேனீ வளா்ப்பில் அதிக லாபம் ஈட்டுவது குறித்து அறிந்து கொள்ள அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்த கண்டுணா்வு சுற்றுலாவினை வேளாண்மை உதவி இயக்குனா் மணிமேகலாதேவி கொடியசைத்து துவக்கி வைத்தாா். அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் ராமலிங்கபுரத்தில் உள்ள அம்ருதா தேனீ பண்ணையின் உரிமையாளரான ராகேஷ் விவசாயிகளை வரவேற்று , வேளாண்மையில் பயிா் வளா்ச்சியில் மகரந்த சோ்க்கைக்கு தேனீயின் பங்கு குறித்தும், இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீயினை பராமரிப்பது குறித்தும், தேனீ பெட்டி பராமரிப்பது, உணவு இல்லாத நேரத்தில் செயற்கை உணவான சா்க்கரை பாகு தயாா் செய்து தேனீவளா்ப்பில் அதிக லாபம் ஈட்டுவது குறித்தும், தேன் எடுக்க தேவையான உபகரணங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தாா். இதில் 50 விவசாயிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனா்.
இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனா் மணிமேகலா தேவி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் செல்வி மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.