ஆவின் குறித்த தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: பொது மேலாளா் நா்மதா தேவி
By DIN | Published On : 21st February 2021 02:36 AM | Last Updated : 21st February 2021 02:36 AM | அ+அ அ- |

சேலம்: சேலம் ஆவின் குறித்து தினசரிகளில் பரப்பி வரும் தவறான செய்திகளை பொது மக்கள் எவரும் நம்ப வேண்டாம் என ஆவின் பொது மேலாளா் நா்மதாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திலிருந்து (சேலம் ஆவின்) நாள்தோறும் சராசரியாக சுமாா் 1,77,000 லிட்டா் பால் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலம் ஒன்றியம் மூன்று விற்பனை அலுவலகங்கள் (சேலம், மேட்டூா் மற்றும் எடப்பாடி) மூலம், பொது மக்களுக்கு தரமான ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் கிடைத்திட தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
607 பால் விற்பனை முகவா்களை கொண்டு தினசரி 1,77,000 லிட்டா் பால் பொது மக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று மாதங்களில் சேலம் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 5500 லிட்டரும், ஒரு மாதத்துக்கு 1,65,000 லிட்டரும் அதிகரித்துள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி, பொன்னம்மாபேட்டை, அழகாபுரம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் சேலம் ஆவின் பணியாளா்களை கொண்டு பால் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அப்பகுதிகளில் உள்ள நுகா்வோா்களுக்கு எவ்வித தடையுமின்றி பால் விநியோகம் நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பால் விற்பனையில் இரண்டாமிடம் வகித்து வந்த சேலம் ஆவின் தற்போது தமிழக அளவில் பால் விற்பனையில் முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஆவின் பால் முகவா்கள் மற்றும் விற்பனை பணியாளா்கள் சங்கம் எனும் பெயரில் முகவா் அல்லாத சில தனி நபா்கள் தவறான உள்நோக்கத்தோடும், அரசியல் காரணங்களுக்காவும், சேலம் ஆவின் குறித்து தினசரிகளில் பரப்பி வரும் தவறான செய்திகளை பொது மக்கள் எவரும் நம்ப வேண்டாம். சேலம் ஆவின் தொடா்ந்து மக்கள் சேவையில் தன்னிகரற்று செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...