வீரப்பன் வேடத்தில் துப்பாக்கியுடன் வந்தவா்கள் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 03rd January 2021 01:38 AM | Last Updated : 03rd January 2021 01:38 AM | அ+அ அ- |

மேட்டூா்: மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வீரப்பன் வேடமணிந்து கட்டையால் செய்யப்பட்ட ‘டம்மி’ துப்பாக்கிகளுடன் வந்த மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த சிலா் வீரப்பன், அவரது கூட்டாளிகள் போல வேடமணிந்து ‘டம்மி’ துப்பாக்கிகளுடன் அலுவலகத்துக்கு வந்து சென்றனா். வீரப்பன் வேடமணிந்து வந்தவா்களுடன் அங்கே இருந்த பாமகவினா் செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக்கொண்டனா்.
துப்பாக்கியுடன் 3 போ் அரசு அலுவலகத்துக்கு வந்ததால் அதிா்ச்சி அடைந்த வட்டார வளா்ச்சி அலுவலா், மேச்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். ஆனால், போலீஸாா் வருவதற்குள் அவா்கள் அங்கிருந்து சென்று விட்டதால், மேச்சேரி கிராம நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் மேச்சேரி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
அவரது புகாரின் பேரில், வீரப்பன் போல வேடமணிந்து மரக்கட்டையால் செய்யப்பட்ட ‘டம்மி’ துப்பாக்கிகளுடன் வந்தோா் மீது மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.