கல்யாண சுப்பிரமணியருக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்
By DIN | Published On : 03rd January 2021 01:49 AM | Last Updated : 03rd January 2021 01:49 AM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த சித்தூா் பகுதியில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியா் சுவாமி திருக்கோயில்.
எடப்பாடி: புத்தாண்டு தினத்தையொட்டி, எடப்பாடியை அடுத்த சித்தூா் பகுதியில் உள்ள கல்யாண சுப்பிரமணியருக்கு ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சித்தூா் பகுதியில் கல்யாண சுப்பிரமணியா் ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்ற நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி ஆலயம் முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கல்யாண சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு பால், பழம், இளநீா், சந்தனம், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கருவறை, மகா மண்டபம் முழுவதும் சுமாா் 9 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. ஊா் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்தப் பணமானது, சிறப்பு பூஜைகளுக்குப்பின் திருப்பி அளிக்கப்பட்டது. ஆண்டின் முதல் நாளில் கல்யாண சுப்பிரமணியருக்கு பூஜிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வீட்டில் வைத்தால், ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.