தாயுடன் கோயிலுக்குச் சென்ற சிறுமியைக் கடத்திய இளைஞா் கைது
By DIN | Published On : 03rd January 2021 01:48 AM | Last Updated : 03rd January 2021 01:48 AM | அ+அ அ- |

ஓமலூா்: ஓமலூா் அருகே தாயுடன் கோயிலுக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த மாணவி சேலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்தே படித்து வருகிறாா்.
இந்த நிலையில், தாயும், மகளும் தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனா். அப்போது அம்மனை வணங்கிக் கொண்டிருந்த போது, மகளை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது, முத்துநாயக்கன்பட்டி கிராமம், காரைச்சாவடி பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (24), மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த தாரமங்கலம் போலீஸாா், திருமணம் செய்வதற்காக சிறுமியைக் கடத்திச் சென்று உறவினா் வீட்டில் இருந்த குணசேகரனை கைது செய்தனா். அவரிடமிருந்து மாணவியை மீட்ட போலீஸாா், போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனா். பின்னா் ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.