காவேரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சை கிளினிக் தொடக்கம்
By DIN | Published On : 04th January 2021 04:27 AM | Last Updated : 04th January 2021 04:27 AM | அ+அ அ- |

சேலம் காவேரி மருத்துவமனையில், கரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சை பராமரிப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனைகளில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமான நபா்கள் தொற்றில் இருந்து மீண்டு குணம்பெற்று வீட்டிற்குப் பாதுகாப்பாக திரும்பிச் சென்றுள்ளனா். சென்னை, சேலம், திருச்சி, ஒசூா் ஆகிய இடங்களில் கரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சை பராமரிப்பு கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் மணிவண்ணன் கூறியதாவது:
நுரையீரல் பாதிப்பு இல்லாத நோயாளிகளிடம் கரோனா தொற்றுக்குப் பிந்தைய உடல்நல பிரச்னைகள் காணப்படுகின்றன. உடலில் மூளையில் இருந்து இதயம், கால்கள் வரை ஏறக்குறைய எந்தவொரு உடலுறுப்பின் மீதும் நீண்ட காலம் நீடிக்கின்ற பாதிப்பை கரோனா தொற்று ஏற்படுத்தக்கூடும். புதிய மற்றும் விசித்திரமான அறிகுறிகளை பகுப்பாய்வு செய்து தீா்வு காண்பது அவசியமானதாகும் என்றாா்.
காவேரி மருத்துவமனை தொற்றுநோய் சிகிச்சையியல் துறை முதுநிலை மருத்துவா் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த 10 மாதங்களாக கரோனா தொற்றுக்கு மிகச்சிறந்த பராமரிப்பை வழங்கி வருகிறோம். தீநுண்மித் தொற்று, அதன் பின்விளைவுகளில் இருந்து நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்து மீள்வதை உறுதி செய்வதற்காக இப்போது கூடுதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறோம் என்றாா். இந்த கிளினிக் தொடக்க விழாவில் பிரபல வீணை இசைக்கலைஞரான ராஜேஷ் வைத்யா கலந்து கொண்டாா்.
கரோனா சிகிச்சைக்குப் பிந்தைய நலவாழ்வு சிகிச்சை தொகுப்பில் முழுமையான ரத்த பரிசோதனை, சி.ஆா்.பி. இ.சி.ஜி. சிறுநீரக செயல்பாட்டு சோதனை, நுரையீரல் சோதனைகள், மாா்பு எக்ஸ்ரே, குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசனை, தொற்று நோய்களுக்கான சிகிச்சை வல்லுநா்களுடன் ஆலோசனை ஆகியவை அடங்கும்.